Thursday, February 25, 2016
அரிப்பு, படை நீங்க நெட்டிலிங்கம்:
வெயில் காலத்தில் உடலில் அரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் நமது தோலில் தோன்றும் வியர்வையின் ஈரப்பதத்தில் ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே காரணம்.
பூஞ்சைக்கிருமிகளுக்கு ஈரம் மிகவும் பிடித்த விஷயம். அதுவும் துர்நாற்றத்துடன் தோலின் கொழுப்பு கழிவு கலந்து வியர்வையாக வெளியேறும் மனிதத்தோலை இவை பற்றிக்கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி வெகு விரைவாக இனவிருத்தி செய்து வளர ஆரம்பித்துவிடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த நாம் சொறிவதால் தோலில் சிறிய ரத்தக்காயங்கள் உண்டாகி, ரத்தத்தில் பூஞ்சை கிருமிகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.
பூஞ்சை கிருமிகளை அழிப்பதும் கட்டுப்படுத்துவதும் மிகவும் சிரமமானதுதான். ஏனெனில் ஒருவரிடம் இருந்து அந்த கிருமிகள் அழிவதற்கு முன் குறைந்தது 10 பேருக்காவது தங்கள் இனவிருத்திகளை பரிமாற்றம் செய்துகொண்டுதான் மறைகின்றன. ஆகவேதான் பூஞ்சையால் தோன்றும் கிருமித்தொற்று வீட்டில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவுகிறது. விடுதியில் படிப்பவர்கள், பழைய, சுத்தமில்லாத ஈரத்துணியை அணிபவர்கள், நீண்டநேரம் உள்ளாடைகளை மாற்றாமல் அணிபவர்கள், ஒரே உடையை மாற்றிப் போடுபவர்கள், பிறரின் அழுக்குத் துணியையும் சேர்த்து ஒன்றாக துவைத்து பயன்படுத்துபவர்கள் என பலதரப்பட்டோருக்கு பூஞ்சை கிருமிகளின் தொற்று உண்டாகிறது. வெளியில்காலத்தில் இது அதிகப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், அதிக அசைவ உணவு உண்பவர்கள் பூஞ்சை கிருமியின் பாதிப்புக்கு அடிக்கடி ஆளாகிறார்கள்.
பூஞ்சை கிருமியின் தொற்றை தவிர்க்க விரும்புபவர்கள் உடம்பை நன்கு சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும். கழுத்து, பிடறி, அக்குள், தொடையிடுக்கு பகுதிகளில் நன்கு தேய்த்து சுத்தம் செய்வதுடன் உலர்ந்த துண்டால் ஈரம் தங்காமல் துடைக்க வேண்டும். வெயில்காலத்தில் காலை மற்றும் மாலையில் தனித்தனி ஆடைகளை அணியவேண்டும். படை உள்ளவர்களின் உடைகளை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். பூஞ்சை கிருமியால் தோன்றும் தொற்றானது படை, படையாக பரவுவதால் பரவுவதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும். நமக்கு நன்கு அறிமுகமான நெட்டிலிங்க மரத்தின் இலை மற்றும் பட்டை பூஞ்சைக்கிருமிகளை அழித்து படையினால் தோன்றும் புண்களை ஆற்றும்.
நெட்டிலிங்க இலைகளை மைய அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றிய அரிப்புள்ள இடங்களில் தடவிவர படை நீங்கும். இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட வயிற்றுக்கிருமிகள் வெளியேறும். ஆனால் குறைந்தளவே சாப்பிட வேண்டும். பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அதனைக்கொண்டு படையுள்ள இடங்களில் தடவிவர படை நிறம் மாறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment